

தினம் ஒரு கொள்கையைக் கடைப்பிடிப்பதைத் தவிர்த்துவிட்டு, நல்ல வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று சிறப்பாகச் செயல்பட வேண்டும் என அதிமுக அரசுக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று (மே 7) முதல் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டுக்குப் போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும், பொதுமக்களும் தங்களது வீட்டு வாசலில் நின்று முழக்கம் எழுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று திருச்சி தில்லை நகரில் உள்ள தனது அலுவலகம் முன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால், மாநில அரசு அதைக் கண்டுகொள்ளாமல் கடைகளைத் திறந்துள்ளனர்.
வருவாய் இல்லை என்பதற்காக டாஸ்மாக் கடைகளைத் திறக்கின்றனர். மாநில அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட, நமக்குக் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் இருப்பதே முக்கியக் காரணம்.
கடந்த 2019 டிசம்பரில் இருந்து 2020 ஜனவரி வரையிலான ஜிஎஸ்டி தொகை ரூ.2,400 கோடியை மத்திய அரசு கொடுத்திருந்தால்கூட, மாநில அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருந்திருக்கலாம். இந்த நிதியைத் தராமல் விட்டதால் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி வருகிறோம்.
வருவாய் இல்லை என்றால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதும் ஏற்புடையதல்ல. மக்கள் மீது அக்கறை இருந்தால் மாநில அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அதேபோல மாநில அரசும், தினம் ஒரு கொள்கையைக் கடைப்பிடிப்பதைத் தவிர்த்துவிட்டு, நல்ல வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று சிறப்பாகச் செயல்பட வேண்டும்" என்றார்.
இதேபோல திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா கன்டோன்மென்ட் எஸ்பிஐ காலனி பகுதியிலுள்ள தனது வீட்டின் முன்பும், திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரியமங்கலம் பழைய பால்பண்ணை விஸ்வாஸ் நகரிலுள்ள தனது வீட்டின் முன்பும் நின்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.