

ஒரே நாளில் 188 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பில் அரியலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று இரவு வெளிவந்த முடிவில் அதிகபட்சமாக சென்னையில் 324 பேருக்கும், அதற்கடுத்து அரியலூர் மாவட்டத்தில் 188 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதில், அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 188 பேரில் 4 பேர் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள், 152 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்தவர்கள், 10 பேர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், 22 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என 500-க்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றில் சென்னை 2,328 பேருடன் முதலிடத்திலும், கடலூர் 324 பேருடன் இரண்டாம் இடத்திலும், அரியலூர் 240 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தொற்றுக்கு அதிகபேர் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையிலிருந்து அரியலூர் வந்துள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்து உடலில் மாற்றம் ஏற்படுபவர்கள் மாவட்ட உதவி எண் 1077 – ஐ உடனடியாக தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.