அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து- உயர்கல்வித்துறை விளக்கம் ​

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து- உயர்கல்வித்துறை விளக்கம் ​
Updated on
1 min read

அண்ணா பல்கலை.க்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து தராவிட்டாலும், தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.​​

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூசன்ஸ் ஆப் எமினென்ஸ்) திட்டத்தை மத்திய அரசு 2017-ல் கொண்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும். அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற தேர்வானது. ​​

இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க உயர்கல்வி உட்பட 5 துறை அமைச்சர்கள் மற்றும் 3 செயலர்கள் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்தது. இந்நிலையில் அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதலை மே 31-ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.​ இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:​

அண்ணா பல்கலைக் கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு காலக்கெடு எதுவும் விதிக்க இயலாது. ​இதுதொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு 2 முறை தான் கூடியுள்ளது. அதன்பின் ஊரடங்கு காரணமாக ஆலோசனை நடத்தவில்லை. இந்த குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் இறுதி முடிவெடுக்க முடியும். எனினும், இந்த அந்தஸ்தை வேறு யாருக்காவது மத்திய அரசு தந்துவிட்டாலும், அண்ணா பல்கலை.க்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசே மேற்கொள்ளும். ​

இவ்வாறு அவர் கூறினார்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in