

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, இரு மாவட்டங்களிலும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 1,800 தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தியதாக சுகாதார தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பி.ஆர்.நடராஜன், ஜெகநாதன், சேகர் ஆகியோர் தெரிவித்தனர்.