

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை நினைவு இல்லமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக நிலத்தை கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டம் இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம்தேதி முதல்வர் அறிவித்தார். இதையடுத்து இதற்கான ஆயத்தப் பணிகளை அப்போதைய சென்னைமாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கினார்.
இதற்கிடையில், அரசின் இந்தமுடிவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 2018-ம் ஆண்டு போயஸ் தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பின், அப்போது மாவட்டஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம் மீண்டும் பொதுமக்களிடம் பேசி, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, நிலத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. இந்நிலையில் தென்சென்னை வருவாய் கோட்ட,நிலம் கையகப்படுத்தும் அலுவலர்மற்றும் வருவாய் கோட்டாட்சியரால் இதற்கான அறிவிப்பு தற் போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூர் வட்டத்தில் உள்ள22 ஏர்ஸ் 60 சதுரமீட்டர் (24 ஆயிரத்து 326 சதுரடி) நிலம் தேவைப்படுவதாக அரசு கருதுகிறது. எனவே, இந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு செய்யப்படுகிறது. இந்தநில எடுப்பினால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை.எனவே அவர்களை அப்புறப்படுத்தவோ, மறு குடியமர்வு மற்றும்மறுவாழ்வுக்கான நடவடிக்கை எடுக்கவோ அவசியம் இல்லை.
இந்த பணிக்கான திட்ட வரைபடத்தை, கிண்டியில் உள்ள தென்சென்னை வருவாய்க்கோட்ட அலுவலகத்தில் வேலை நாட்களில் பார்வையிடலாம் என்றுஅறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.