

கோவில்பட்டியில் மருத்துவ மாணவர் உள்ளிட்ட 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கோவில்பட்டி இந்திரா நகரைச்சேர்ந்த 23 வயது இளைஞர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று காலை கார் மூலம் கோவில்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
தகவல் அறிந்து வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று, அந்த மாணவர், அவரது பெற்றோரின் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
மேலும், அவரது வீட்டை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதே போல், கோவில்பட்டி அருகே கிழவிபட்டியை சேர்ந்த 33 வயது டிரைவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு லாரி மூலம் கீழஈரால் வந்து, அங்கிருந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதையறிந்து அதிகாரிகள் அங்கு சென்று அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்து, ரத்தம், சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
பெங்களூரூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த 24 இளைஞர் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மூலம் ஊருக்கு வந்துள்ளார். அவரும் தனிமைப்படுத்தப்பட்டார்.