Last Updated : 06 May, 2020 09:31 PM

 

Published : 06 May 2020 09:31 PM
Last Updated : 06 May 2020 09:31 PM

மதுரை மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு போலீஸார் உட்பட 6 பேர் குழு பாதுகாப்பு: எண்ணிக்கையைப் பொறுத்து டோக்கன் வழங்க ஏற்பாடு

மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு மதுபான கடைக்கும் போலீஸார் அடங்கிய 6 பேர் குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகையே மிரட்டும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரிக்கிறது. இதை தடுக்க மே 17ம்தேதி வரை ஊடரங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் தாண்டியது. மதுரை மாவட்டத் தில் 110-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவப்பு மண்டலத்திலுள்ள இம்மாவட்டத்தில் 25 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து போலீஸார், சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றன.

இருப்பினும், இன்று முதல் மதுரையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள், குறைந்த தொழிலாளர்கள் மூலம் கட்டுமான பணிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட தொடங்கின.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (மே7) முதல் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் சுமார் 280க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இருந்தபோதிலும், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதிகள் உட்பட 30 இடங்களிலுள்ள கடைகளைத் திறக்க, அனுமதியில்லை.

எஞ்சிய 250க்கும் மேலான மதுக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை கப்பலூர், மணலூர் மதுபான குடோன்கள், திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மது பானங்கள் லாரி, வேன்களில் அந்தந்த கடைகளுக்கு நேற்று ஏற்றிச் செல்லப்பட்டன.

மதுப்பாட்டில் வாங்குவோர் சமூக விலகல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கடையின் முன்பகுதியிலும் வட்ட வடிவில் கோடு வரையப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

50 வயது, 40-50 வயது, 40 வயதுக்குள் என, பிரித்து அதற்கான நேரத்தில் மதுபாட்டில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுவிற்பனையை பொறுத்து ஒவ்வொரு கடையிலும் தலா 2 போலீஸார், ஊர்காவல் படையினர், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவி னரும், அதிகமாக மதுபாட்டில்கள் விற்கும் கடைகளில் தலா 4 போலீஸார், ஊர்காவல் படை வீரர், தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப் பட்டுள்ளது. கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ஊழியர்களும் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

மதுப் பிரியர்களின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன் முறை பின்பற்றப்படும். பறக்கும் படை போலீஸார் ரோந்து சுற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

ஊரடங்கையொட்டி சுமார் 40 நாளுக்கு பின், மதுக்கடைகள் திறக்கப்படுவதால் கூட்டத்தை சமாளிக்க தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x