

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் படையெடுக்கின்றன. இதனால் முக்கிய சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிகளவு உள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக தினமும் 500ஐ கடந்து காணப்படுகிறது.
இதனால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டப்பகுதிகளில் உள்ள சொந்த ஊருக்கு திரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், பெரும்பாலும் சொந்த வாகனங்களில் உரிய அனுமதி பெற்று வருபவர்கள் தான் அதிகம்.
இதில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி தோட்டின்லோவன்பட்டி காவல் சோதனைச்சாவடி, எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை சோதனைச்சாவடி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இதில், முக்கியமாக கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொந்த ஊர்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் அதிகம். இவர்களில் சரியான அனுமதியின்றி வருவோரை போலீஸார் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
அனுமதியுடன் வருவோரின் தகவல்களை பெற்று அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், கோவில்பட்டி காவல் சோதனைச்சாவடியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால், 24 மணி நேரமும் பணியாற்றக்கூடிய வகையில் மருத்துவ குழுவினரை பணியமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து வருவோரை சோதனைச்சாவடிகளிலேயே பரிசோதனை செய்வதன் மூலம் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி சளி, ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய முடியும்.
இதில், அவர்களுக்கு தொற்று உறுதி என்றால் இங்கேயே சிகிச்சை அளிக்கலாம். மேலும், அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் பரவல் என்பது தடுக்கப்படும். எனவே, கோவில்பட்டி போன்று முக்கிய காவல் சோதனைச்சாவடிகளில் நிரந்தரமாக மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என த.மா.க. நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.