தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் தாமதம்

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் தாமதம்
Updated on
1 min read

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உறவினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (31).

சிஆர்பிஎப் வீரரான இவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சந்திரசேகர் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

உயிரிழந்த சந்திரசேகர், கடந்த 2014-ம் ஆண்டு ஆவடியில் சிஆர்பிஎப் வீரராக பணியில் சேர்ந்தார். 2 ஆண்டுகள் ஆவடியில் பணியாற்றிய பின்னர், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஜெனிபர் கிறிஸ்டி (27) என்ற மனைவியும், ஜான்பீட்டர் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். சந்திரசேகர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவந்து, அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், இன்று விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவந்து, சாலை வழியாக சொந்த ஊருக்கு சந்திரசேகர் உடல் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், டெல்லியில் இருந்து தொடர்புகொண்ட அதிகாரிகள், இன்று உடலை கொண்டுவரவில்லை என்றும், நாளை கொண்டுவரப்படும் என்றும் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சந்திரசகர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in