

தமிழகத்தின் பொருளாதார நிதி நிலையை அனைவரும் அறிய வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உருக்கமாக பேசினார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மதுரையில் உள்ள அம்மா உணவகங்களை அனைத்திலும் விலையில்லாமல் மூன்று வேளைக்கும் அடித்தட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது. ‘கரோனா’ நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இருந்து மதுரையில் 5 லட்சத்து ஆயிரத்து 13 நபர்கள் நேற்று வரை அம்மா உணவகம் மூலம் பயன்அடைந்திருக்கிறார்கள். 82 ஆயிரத்து 270 முட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வசித்துக் கொண்டிருக்கும் மது பிரியர்கள் கால்கடுக்க நடந்து சென்று அடுத்து மாநிலத்தில் சென்று மது அருந்துகிறார்கள். அதை தடுக்கவே அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய உள்ளது.
மேலும்,தமிழகத்தின் பொருளாதார நிதி நிலையை அனைவரும் அறிய வேண்டும். விலைவாசி தமிழகத்தில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் எந்த உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. உயிர்பலி குறைவாக இருப்பது தமிழகத்தில் மட்டுமே,தமிழகத்தில் மட்டுமே நோயை கட்டுப்படுத்தி உள்ளம்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சிகள் நானும் இருக்கிறேன், நானும் ரவுடிதான், நானும் ரவுடி தான் என நடிகர் வடிவேலு கூறுவது போல் அவரும் நானும் அரசியல் களத்தில் இருக்கிறேன் என்று உணர்த்துவதற்காக அரசு மீது விமர்சனம் செய்கிறார், ’’ என்றார்.