

இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலை இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அரசு அடுத்து அங்கே வாழும் தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்வதை நிறுத்தாமல் செய்து கொண்டே வருகிறது.
அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக தற்போது வழங்கியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு கடந்த காலத்தில் இந்திய அரசு இது போல் தான் பயிற்சி கொடுத்தது.
அந்த வரிசையில் தற்போது போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமையன்று, இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டைப் போற்றும் வகையில், இலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்ப டையில் சேவையாற்றிவந்த இந்திய கடலோர காவல்படையின் “வராஹா' ரோந்துக் கப்பல், அந்த நாட்டுக்கு அளிக்கப்பட்டது.