

வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழர்களைத் தாமதமில்லாமல் மீட்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் பதிவு செய்யப்படுவதன் அடிப்படையில் மே-7 முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுவர் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் நோய்த் தொற்றுக்கு ஆளாகாதவர்கள், முதல் கட்டமாக அழைத்து வரப்படுவர் என்றும் அவர்கள் இங்கு வந்த பிறகு 14 நாட்கள் தடுப்பு முகாமில் வைக்கப்படுவர் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி தற்போது கேரள அரசு, அபுதாபி மற்றும் துபாயிலிருந்து மலையாள மக்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது.
அதுபோல சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசு சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய அவர்களின் உறவினர்கள் விரும்புகிறார்கள்.
தமிழகத்திற்கு அமீரகத்திலிருந்து இரண்டு விமானங்கள் புறப்பட உள்ளதாக தெரிய வருகிறது. அனைவரையும் விமானங்கள் வழியே அழைத்து வருவது உடனடி சாத்தியமா எனத் தெரியவில்லை. ஒருபுறம் விமானங்கள் வழியாக ஏற்பாடுகள் செய்யப் பட்டாலும், கப்பல்கள் மூலம் குறைவான செலவில், நிறையப் பேரை, ஒரே நேரத்தில் அழைத்து வருவது சாத்தியமானதாகும். இது குறித்தும் தமிழக அரசு மத்திய அரசிடம் பேச வேண்டும்.
இவ்விஷயத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் கீழ் செயல்பட வைத்து, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் அவர்களைத் தொடர்பு கொள்ளச் செய்து, இப்பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.