

டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க கோரிய வழக்கில் நிபந்தனைகளுடன் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை விதிக்க கோரிய வழக்கில் மாலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரியும், முழுமையாக ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் மதுப்பான கடைகளை திறக்க கோரியும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை காணொலி காட்சி மூலம் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு விசாரித்தது. அப்போது மதுபான விற்பனை குறித்த சில கேள்விகளை அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பியது. ஆன்லைனில் மதுபான விற்பனை நடத்த முடியுமா? டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து அரசு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன் படி இன்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் அளித்த பதிலில், டாஸ்மாக் மதுவிற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது, என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. கரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகள் திறக்கப்படுவது போல தான் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக விளக்கமளித்தார்.
மதுவை மொத்தமாக யாருக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது. தனிநபர்களுக்கு தான் விற்கப்படும், அதோடு சமூக விலகல் முழுமையாக பின்பற்றப்படும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழங்கப்படும். என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த விளக்கங்களை பதிவு செய்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது மாலை தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.
பின்னர் மாலை இந்த வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். அதில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி உண்டு என சில நிபந்தனைகளையும் விதித்தனர்.
மதுக்கடைக்கு வருவோர் கண்டிப்பாக தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அரசு அதை கண்காணிக்க வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு முழு பாட்டில் அளவுக்கு மட்டுமே மது விற்க வேண்டும்.
ஆன்லைனில் விற்க அனுமதி. அவ்வாறு விற்கும்போது ஒரு நாளைக்கு இரு பாட்டில்கள் தான் விற்க வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தான் விற்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் குறித்த நேரத்தில் விற்பனை செய்யும் அரசின் முடிவு, குறிப்பிட்ட வயதினருக்கு குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை போன்றவற்றையும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.