Last Updated : 06 May, 2020 05:00 PM

 

Published : 06 May 2020 05:00 PM
Last Updated : 06 May 2020 05:00 PM

அமெரிக்காவை போல் தமிழகம் மாற வேண்டுமா?- டாஸ்மாக் பணியாளர்கள் ஆவேசம்

‘தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் அமெரிக்காவை போல் தமிழகத்திலும் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஊரடங்கு முடியும் வரையாவது டாஸ்மாக் கடைகள் திறப்பதை தள்ளிப்போட வேண்டும்’ என டாஸ்மாக் பணியாளர்கள் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக வருவாய் இழப்பை பற்றி கவலைப்படாமல் மதுபான கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நாளை (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு பிரதான எதிர்கட்சியான திமுக உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதை டாஸ்மாக் ஊழியர்களே ஏற்கவில்லை.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் தமிழ் இந்துவிடம் இன்று கூறியதாவது:

ஆந்திரா, கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மது வாங்க எல்லையோ மாநிலங்களுக்கு செல்வதை தடுக்க டாஸ்மாக் திறக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்கத்து மாநிலங்களில் நடைபெறும் திருமணம், மரணத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அப்படியிருக்கும் போது மதுவாங்க பக்கத்து மாநிலம் செல்பவர்களை போலீஸார் நினைத்தால் தடுக்க முடியாதா?

மது விற்பனை நடைபெறாத கடந்த 40 நாளில் மது கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக தமிழகத்தில் யாரும் சாகவில்லை. இதனால் ஊரடங்கு முடிவதற்கு முன்பு டாஸ்மாக் கடைகளை திறக்க எந்த அவசரமும், அவசியமும் இப்போது ஏற்படவில்லை.
40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் ஒரே நேரத்தில் மது வாங்க ஆட்கள் கூடுவதற்கு வாய்புள்ளது. வெளியூர்களில் இருந்தும் ஆட்கள் வருவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

கூட்டத்தில் யாராவது ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால் மது வாங்க வந்தவர்கள், டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள, உதவியாளர்களுக்கும் தொற்று ஏற்படும்.

அப்படியொரு நிலை ஏற்பட்டால் அமெரிக்காவை போல் தமிழகத்திலும் கரோனா தொற்று அதிகரிக்கும். எனவே ஊரடங்கு முடியும் வரையாவது டாஸ்மாக் கடைகளை திறப்பதை தள்ளிப்போட வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x