Published : 06 May 2020 04:51 PM
Last Updated : 06 May 2020 04:51 PM

தமிழகத்தில் மது ஒழிப்பை அமல்படுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அருமையான வாய்ப்பு; மதுக்கடைகளை மூட வேண்டும்: பிஎம்எஸ் வலியுறுத்தல்

50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவிலிருந்து காக்க ஆண்டவன் அளித்த வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி மதுக்கடைகளை கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் தென்பாரத அமைப்புச் செயலாளர் எஸ். துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுவால் பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைவு, கொலை, கொள்ளை, வன்முறை, பாலியல் வன்கொடுமை, குடும்ப அமைதி கெடுதல், உடல் நலம் பாதித்தல், பொருளாதார இழப்பு, வேலைக்கு செல்லாதிருத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குடும்ப அமைதி கெடுவதால் மது அருந்தி தன்னிலை இழப்பதால் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளிடமிருந்து தனித்திருத்தல்- விளைவு : அவர;களின் அன்பை இழத்தல். நாளடைவில் மனோரீதியான நோய்களுக்கு ஆட்படுதல். குழந்தைகளுக்கு தகப்பனின் அன்பு, வழிகாட்டுதல் இழப்பு ஆகியவற்றால் அவர்கள் வழி தவறுதல் மற்றும் குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் நலம் பாதிப்பதால் தொடர்ந்து, மது அருந்துவதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்புத் தளர்ச்சி, கல்லீரல் பாதித்தல், சிறுநீரக பாதிப்பு மற்றும் 200 வகையான நோய்கள், மஞ்சள் காமாலை உள்ளிட்ட கடுமையான நோய்களால் பீடிக்கப்படுதல், ஆண்மையிழத்தல், சமூகத்தில் மதிப்பிழத்தல், பொருளாதார ரீதியிலான இழப்பு ஏற்படுகிறது.

பள்ளிப்பருவத்திலேயே தற்பொழுது பலரும் (மாணவிகள் உட்பட) மது அருந்துவதாக செய்திகள் வருகின்றன. அதைத் தவிர்த்து 20 வயதில் ஒருவர் மது அருந்த தொடங்கினால் 40 வருடங்களுக்கு (விலை உயர;வு உட்பட) ரூ. 40,00,000 இழப்பு ஏற்படும்.

வேலைக்கு செல்லாதிருத்தல் காரணமாக உடல் நலிவாலும் மன உளைச்சலாலும் மாதத்தில் 10 முதல் 15 நாட்கள் மட்டும் வேலைக்குச் செல்லுதல் போன்ற பாதிப்புகளை மக்கள் சந்திக்கின்றனர்.

இந்த இழப்பை ஈடுகட்ட வழி, தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை ஏறத்தாழ 6 கோடி. இதில் ஒரு கோடிப்பேரை தவிர்த்து ஏனைய 5 கோடி பேரிடம் “தமிழக மக்கள் நலவாழ்வு நிதி” எனப் பெயரிட்டு மாதம் ரூ.50 வசூல் செய்தால் வருடத்திற்கு ரூ.3000 கோடி கிடைக்கும்.

இதற்காக பெரியளவில் பிரச்சாரம் தேவைப்படும். “மாதம் 50 ரூபாயா அல்லது சீரழியும் தமிழகமா” என்கிற கேள்வியினை முன் வைத்தால் நிச்சயமாக மக்கள் இதைவிட அதிக நிதி அளிப்பர். தொழில் நிறுவனங்களிடம் வருமானத்திற்கேற்ப இதே கோரிக்கையை முன்வைத்து வசூல் செய்யலாம். இவை குறிப்பிட்ட சில காலத்திற்கு நடைமுறைப்படுத்தக் கூடியவை.

ஆரோக்கியமான தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்கு வரும்போது நிறுவனங்களில் உற்பத்தி, வருமானம் பெருகி அதிக வரி கிடைக்கும். கடன் பத்திரங்களை வெளியிட்டு சிறு, குறு, பெரு நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்று முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் இப் பணத்தை திருப்பிச் செலுத்த முடியும். அதுபோலவே வரி வரிவசூலிப்பில் உள்ள சுணக்கத்தைப் போக்க வேண்டும்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பின்றி கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம்.மணல் குவாரிகளில் திருட்டை தடுப்பது, தென்னை, பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்க விவசாயிகளை அனுமதித்தல், இதனை பதப்படுத்தி பாக்கட் முறையில் விற்பனை செய்யலாம். இதற்கு 30 சதவிகிதம் வரை வரியாய் வசூலிக்கலாம்.
பொருளாதார நிலை மேம்படும் வரை மிகவும் அத்தியாவசிமானவர்களுக்கு மட்டும் இலவசங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளித்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நீர்மேலாண்மையை சரியாகக் கடைபிடித்து விவசாயத்தை மேம்படுத்தலாம், விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வருவாயைப் பெருக்குதல், அனைத்திற்கும் மேலாக அனைத்து மட்டங்களிலும் உள்ள லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டும்.

தவிர, சமயப் பெரியோர்களால் அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல், தொழிற்சங்கங்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினை அமைத்து அரசிற்கான வருமானத்தினை உயர்த்துவதை பொது மக்களின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தலாம்.

50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவிலிருந்து காக்க ஆண்டவன் அளித்த வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி மதுக்கடைகளை கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

பிஎம்எஸ் ஸ்தாபகர் மறைந்த தத்தோபந்த் டெங்கடியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்திலுள்ள பிஎம்எஸ் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இன்று( 06.05.2020) மாலை 7 மணிக்கு மதுவில்லா தமிழகத்தைப் படைத்திடுவோமென பிரச்சாரம் செய்ய வீடுகளில் உறுதி மொழி ஏற்றகவுள்ளனர்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x