Published : 06 May 2020 02:35 PM
Last Updated : 06 May 2020 02:35 PM

காய்கறி ஏற்றி வந்த லாரி மூலம் பயணம்; எப்போதும்வென்றான் அருகே இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று

எப்போதும்வென்றான் அருகே ஆதனூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இளம்பெண் கடந்த மாதம் 29-ம் தேதி, தாம்பரத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி மூலம் எட்டயபுரத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்து தனது சகோதரரை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்து, அவருடன் மோட்டார் சைக்கிளில் ஆதனூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவரிடம் விசாரித்த போது அவர் சென்னையிலிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் அந்த இளம்பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை அந்த இளம்பெண் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், ஆதனூரில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவரது அம்மா, சகோதரர், உள்ளிட்ட 4 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவரது வீட்டைச் சுற்றி உள்ள வீடுகளில் வசிப்போரின் இரத்தமாதிரிகளை மருத்துவ குழுவினர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு மற்றும் சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x