

நாடெங்கும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 24-ம் தேதியிலிருந்து இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, நாளையிலிருந்து மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்மலை ரயில்வே பணிமனையை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 4,106 பேர் பணிபுரியும் இந்த பணிமனையில் 33 சதவீத ஊழியர்கள் மட்டும் அதாவது 1,355 பேர் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மூன்று ஷிஃப்ட் நடக்கும் இந்த பணிமனையில் தற்போது காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஒரு ஷிஃப்ட் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொன்மலை ரயில்வே பணிமனை நாளை முதல் இயங்கவிருப்பதை அடுத்து, அங்கே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாகப் பணி செய்யும் இடங்களில் இடைவெளிக்கான குறியீடுகளை ரயில்வே நிர்வாகம் வடிவமைத்து வருகிறது.
1,355 பேர் பணிக்கு வரமுடியும் என்றாலும் தற்சமயம் உள்ளூர்ப் போக்குவரத்து இல்லாததால் பொன்மலை பணிமனை பணியாளர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 300 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வரமுடியும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மீதமுள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் தொலை தூரங்களில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகளில்தான் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். இப்போது பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லாத நிலையில் அவர்கள் பணிக்கு வரப் பெரிதும் சிரமப்படுவார்கள்.
எனவே, பொது முடக்கம் முடிவுக்கு வரும்வரை பொன்மலை பணிமனை இயங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுக்கக்கூடாது என ஏற்கெனவே டிஆர்இயு தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் பணிமனை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்லத் தகுந்த ஏற்பாடுகளையும், பணிமனையில் தனி மனித இடைவெளியுடன் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணி செய்வதற்கான ஏற்பாடுகளையும் ரயில்வே நிர்வாகம் செய்துதர வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.