

பணியில் இருந்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான பூவை.தயாபரன் பேரிடர் காலங்களில் எல்லாம் தாமாக ஓடிவந்து அரசுக்கு நிதி அளிப்பார்.
இதோ இந்த கரோனா பேரிடர் நேரத்திலும் தயாபரனின் தாராள சேவை தொடர்கிறது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் வசிக்கும் பூவை.தயாபரன், பேரிடர் காலங்களில் எல்லாம் தன்னால் இயன்ற நிதியுதவியை அரசுக்கு அனுப்பி உதவ மறக்கமாட்டார். அந்த வகையில், தற்போது உலகையே ஆட்டுவிக்கும் கரோனா என்ற கொடிய நோய் தொற்று காலத்திலும் ஒரு லட்சம் ரூபாயை தமிழக அரசின் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார்.
பூவை.தயாபரன் துறையூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 27 ஆண்டுகளும், துறையூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 2 ஆண்டுகளும் தலைமையாசிரியாராக பணிபுரிந்தவர். தான் பணியில் இருந்த காலத்தில் எல்லாம் இயற்கை பேரிடருக்கு தனது ஒரு மாத ஊதியத்தை அப்படியே வழங்கியவர். ஓய்வுபெற்றபின்பு, காஷ்மீர் வெள்ளத்தின்போது 10,000 ரூபாய், உத்தராகண்ட் வெள்ளத்தின்போது 18,720 ரூபாய், சென்னை பெரு வெள்ளத்தின்போது 25,000 ரூபாய் என தனது சக்திக்கு ஏற்ப உதவியவர் தயாபரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கரோனா போரை எதிர்க்கொள்ள அரசுக்கு உதவும் வகையில் ஒரு லட்ச ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பியிருக்கிறார் தயாபரன்.
இதற்கு நன்றி தெரித்து தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து பாராட்டி நன்றி கடிதம் வந்துள்ளது.