

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற அரசு அனுமதித்துள்ளது. இதற்காக பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு தொடக்கத்தில் 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அப்போது இருந்தே செந்துறை பகுதியை போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது, கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து அரியலூர் வந்த நூற்றுக்கணக்கானோரில் செந்துறை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரும் திருச்சி மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், 100-க்கும் மேற்பட்டோர் செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முகாமில் தங்கவைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் செந்துறை பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அரசிதழில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, செந்துறை பகுதியில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகப் பேர் உள்ளதால், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முழுகட்டுப்பாட்டில் செந்துறை பகுதி கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், செந்துறையில் உள்ள பெரிய ஏரியில் தண்ணீர் முழுமையாக வற்றியதால், அதில் கிடக்கும் மீன்களை பிடிக்க இன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏரியில் இறங்கினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் ஏரிக்கு சென்று பொதுமக்களை விரட்டியடித்தனர்.
உயிர்க்கொல்லி நோய் என சொல்லப்படும் கரோனா வைரஸ் அபாயம் பற்றி கவலை படாமல், இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மீன் பிடிக்கிறார்களே. உயிரை விட மீன் பெரிதா? என போலீஸார் அலுத்துக்கொண்டனர்.