

ஊரடங்கில் கள்ளத்தன மதுவிற்பனை சில அதிகாரிகள் துணைத்துடன் நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வருவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு கடந்த மார்ச் கடைசி வாரத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆனால் மதுபானக்கடைகள் சீல் வைக்கப்படவில்லை. இச்சூழலில் கள்ளச்சந்தையில் மது விற்பனையானது. இதுதொடர்பாக புகார்கள் வந்ததால் இரண்டு வாரங்களுக்கு பிறகு கடைகள் சீல் வைக்கப்பட்டன.
தொடர்ந்து மதுபானங்கள் விற்பனையானதால் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு தந்தார். அதையடுத்து கள்ளமது விற்பனை நடந்தால் அப்பகுதியுள்ள காவல்நிலைய அதிகாரி விசாரிக்கப்படுவார் என்று குறிப்பிட்டார். மேலும் மதுவிற்பனை தொடர்பாக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு அதன் தலைவராக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் நியமிக்கப்பட்டார். கலால் துணை ஆணையர் தயாளன் அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு வேறு பணி ஒதுக்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து மதுபானக்கடைகளில் ஆய்வுக்கு சென்றபோது மதுபானங்களை எடுத்து சென்றதாக தாசில்தார் கார்த்திகேயன், அவருடன் சென்ற குழுவினர், போலீஸார் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கார்த்திகேயன் போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டதாக புகார்கள் வந்ததால் அதுதொடர்பாக விசாரித்து மே 6ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் அருணுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். பின்னர் சிறப்பு பிரிவு எஸ்எஸ்பி ராகுல்அல்வாலை மீண்டும் சட்டம் ஒழுங்கு எஸ்எஸ்பியாக மாற்றப்பட்டார்.
புதுச்சேரியில் 95 மதுக்கடை உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடந்து முடிந்துள்ளது. அதில் ஐந்து மதுபான கடை உரிமையாளர்கள் விசாரணைக்கு வராததால் அவர்களுக்கான விசாரணை வரும் 7ம் தேதி நடக்கிறது. கையிருப்பு விவரங்கள் தவறாக இருநத்தால் இரண்டு கடை உரிமையாளர்கள் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கான விசாரணையும் வரும்7ல் நடக்கிறது. இச்சூழலில் 75 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கலால் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், "ஊரடங்கில் கள்ளத்தன மதுவிற்பனை சில கலால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் நடந்தது தொடர்பாக சிபிஐவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.