

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் கரோனா நிதி வழங்கக்கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்கள் இன்று கீர்த்தனை வாசித்தனர்.
கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கங்காஜடேஸ்வரர் சிவன் கோயில் அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து கீர்த்தனை வாசித்து, நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்கள் கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அப்போது, அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கோவிந்தபுத்தூர், பெரிய திருக்கோணம், கோடாலி கருப்பூர், கீழப்பழுவூர், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 - க்கும் மேற்பட்டோர் நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்கள் உள்ளனர். தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், சுப நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் ஏதும் நடைபெறாததால், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். மேலும், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், திருமணம், திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த தேதிகள் குறிக்க மேலும் சில வாரங்கள் மற்றும் மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை எங்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கிடையாது. எனவே, தமிழக அரசு, இசை கலைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.