

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக 5 கோடி செங்கல்கள் வேக வைக்க முடியாமல் உள்ளது. இது மண்ணாகி விடுமோ என்ற அச்சத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர். இதை தயார் செய்தால் இதன் மதிப்பு ரூ. 25 கோடி வரை இருக்கும்..
கரோனாவால் ஊரடங்கு அமலாகி 44 நாட்களை கடந்து விட்டது. தற்போதுதான் புதுச்சேரியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தொழில்களுக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. ஊரடங்கில் அனைத்து நடுத்தர தொழில்களும், சுய தொழில் புரிவோரும் கடும் பாதிப்பில் வீழ்ச்சியடைந்துள்ளனர். கிராம மக்களில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்ந்து செங்கல் தொழிலும் கடும் பாதிப்பில் உள்ளது.
கிராமப்புறங்களில் செங்கல் தொழில்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது ஆனால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் வம்புபட்டு சோரப்பட்டு செல்லிப்பட்டு விநாயகம்பட்டு நெற்குணம் கலித்திறம் பட்டு ஆகிய சுற்றுப் பகுதிகளில் 5 கோடிகளுக்கும் மேலாக பச்சை செங்கல்கள் அறுத்து வைத்து இவைகளை வேகவைப்பதற்கு மூலப் பொருட்கள் இல்லாமலும் உள்ளது.
செங்கல் தொழிலில் ஈடுபடுவோர் கூறுகையில், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கும் அதிகளவில் செங்கல் செல்லும். ஆனால், தற்போது விழுப்புரம், கடலூரில் தொற்று அதிகமாக இருப்பதால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் பணிகள் மும்முரமாக தொடங்கவில்லை. ரூ. 5 கோடி பச்சை செங்கல்கள் வேகவைக்க மூலப்பொருட்கள் இல்லாமல் உள்ளது.
தார்பாயும் அந்தளவுக்கு இல்லை. இதை வேக வைத்து தயாரானால் இதன் மதிப்பு ரூ. 25 கோடி வரை இருக்கும்" என்கின்றனர்.
கூலி வேலை செய்யும் பெண்கள் கூறுகையில், "ஊரடங்கால் தினக்கூலி வேலைக்கோ, இதர வேலைக்கோ ஆண்கள் செல்ல முடியவில்லை. நாங்கள் செங்கல் சூளையில் கூலி வேலைக்கு வருகிறோம். வங்கியில் வாங்கிய கடனுக்கு தொகை செலுத்தவே பலரும் வேலைக்கு வருகிறோம். அரசு அறிவித்த தொகை நிறுத்தி வைத்தாலும் நாங்கள்தானே கட்டவேண்டும். அதற்காகவே பலரும் பணி புரிய வேண்டியுள்ளது" என்கின்றனர்.