Published : 06 May 2020 08:37 AM
Last Updated : 06 May 2020 08:37 AM

கோயம்பேடு மார்க்கெட் மூடல் எதிரொலி: தருமபுரியில் ஏரியில் கொட்டப்பட்ட கத்தரிக்காய்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரியில் கொட்டப்பட்ட கத்தரிக்காய்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.

தருமபுரி

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டதால் விற்பனையாகாத கத்தரிக்காய்களை தருமபுரியில் விவசாயி ஏரியில் கொட்டினார்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வள்ளிமதுரை (வரட்டாறு) அணையின் பாசனப் பரப்பு பகுதியிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான விவசாயிகள் வெண்டை, பாகல், சுரை, புடலை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர். அதிக பரப்பில் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவோ அல்லது கூட்டாக இணைந்தோ காய்களை சேகரித்து வாகனங்களில் ஏற்றி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

தற்போது கரோனா தொற்று அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகளை சென்னைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு தொடர்ந்து காய்கறி அனுப்பி வந்த விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், விவசாயிகள் அரூர் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு சென்றனர். இங்கு, குறிப்பாக நாட்டு ரக கத்தரிக்காய்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. பராமரிப்பு மற்றும் காய் அறுக்கும் கூலி செலவினங்களை சமன் செய்யும் அளவுக்கு கூட விலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் நேற்று 1 டன் கத்தரிக்காய்களை டிராக்டரில் ஏற்றிச் சென்று அரூர் பெரிய ஏரியில் கொட்டிச் சென்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள் சாக்குகளுடன் வந்து தங்களுக்கு தேவையான அளவு கத்தரிக்காய்களை அள்ளிச் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘காய்கறி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, அறுவடையாகும் காய்கறி களை விற்றால் தான் வருமானம் கிடைக்கும். கரோனா பிரச்சினையால் விளைபொருட்களை உரிய நேரத்திலும், உரிய விலைக்கும் விற்க முடியாமல் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம். ஊரடங்கு காலத்தில் பல்வேறு நெருக்கடிகளால் விற்பனையாகாமல் வீணான விளைபொருட்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x