Published : 06 May 2020 08:34 AM
Last Updated : 06 May 2020 08:34 AM

21 நாட்களாக கரோனா தொற்று இல்லை: பச்சை மண்டலமானது ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 21 நாட்களாக கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாறியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவருக்குத்தான் முதன்முதலில் கரோனா தொற்று உறுதியானது. அதன்பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பரவியது கண்டறியப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 29-ம் தேதி கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தநிலையில், ஏப்ரல் 1-ம் தேதி 20 ஆகவும், ஏப்ரல் 5-ம் தேதி 28 ஆகவும், ஏப்ரல் 8-ம் தேதி 32 ஆகவும் உயர்ந்தது. ஏப்ரல் 9-ம் தேதி ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு, நான்கு என உயர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி 70 ஆக உயர்ந்தது. இதில், பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 69 பேரும் குணமடைந்தனர். இதையடுத்து, சிவப்பு மண்டலத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் ஏப்ரல் 28-ம் தேதி முதல் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது.

இந்நிலையில், கடந்த 21 நாட்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இதன் மூலம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:

கடந்த 21 நாட்களாக கரோனா தொற்று கண்டறியப்படாததால், பச்சை மண்டலத்துக்கு ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது. இந்நிலை ஏற்பட பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பு மிக முக்கிய காரணமாகும்.

தற்போது, அரசு ஊரடங்கில் தளர்வு செய்து கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதித்துள்ளது. இந்த தளர்வு மே 18-ம் தேதி வரை தொடரும்.

பொதுமக்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு திரும்ப வேண்டும். இதன் மூலம் தொற்று ஏற்படாத நிலையை தொடரச் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x