

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று உழைப்பாளிகள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வை சிதைத்துள்ள நிலையில் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சில முதலாளி சங்கங்கள் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை, தேசத்தின் நலன் என்ற முகமூடியோடு பறிக்க முனைந்துள்ளன. மத்திய பாஜக அரசு ஏற்கெனவே தொழிலாளர்கள் போராடிப் பெற்ற பல உரிமைகளை சட்டதிருத்தத்தின் மூலம் பறித்துக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
ஒத்திசைவு பட்டியலில் தொழிலாளர் நலன் இருப்பதால் இதைப் பயன்படுத்திக் கொண்டு சில மாநில அரசுகளும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி அறிவிக்கை செய்துள்ளன. கூடுதலாகப் பணிபுரியும் 4 மணி நேரத்துக்கு 2 மடங்கு சம்பளம் என்பதற்குப் பதிலாக விகிதாச்சார முறையில் வழக்கமான சம்பளமே கொடுத்தால் போதும் என்று குஜராத் மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்துக்கும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும். இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை பல மடங்கு அதிகரிக்கும். இது கண்டிக்கத்தக்கது. முதலாளிகள் சங்கங்களிடம் இருந்து வந்துள்ள இத்தகைய ஆலோசனைகளை தமிழக முதல்வர் ஏற்கக்கூடாது. தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு இந்த செயலை முறியடிக்க முன்வர வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.