Published : 06 May 2020 08:17 AM
Last Updated : 06 May 2020 08:17 AM

மதுக்கடைகளை திறந்தால் கரோனா தடுப்புப் பணிகள் பாதிக்கும்; சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சிக்கலாகும்: மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்தால், மக்கள் நடமாட்டம் அதிகமாகி கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகபோலீஸாரை பணியில் ஈடுபடுத்த நேரிடுவதுடன் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என சமூகஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை தவிர கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நாளை முதல் (மே 7)டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போதைய இக்கட்டானசூழலில் மதுக் கடைகளைத் திறப்பது ஆபத்தானது என்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.

டெல்லி, மும்பை, ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகளைத் திறந்தபோது, மது வாங்க ஏராளமானோர் கூடுவதும், சில கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருப்பதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் தள்ளுமுள்ளு ஏற்படுவதும் அதனால், போலீஸ் தடியடி நடத்துவதும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறந்தால் அங்கு கூடும் கூட்டத்தை முறைப்படுத்த ஏராளமான போலீஸார் தேவைப்படுவார்கள். டாஸ்மாக் கடைகளில் 6 அடி இடைவெளியில் நின்றுதான் மது வாங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தினாலும், அது நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை. இதுதவிர முன்கூட்டியே கூட்டம் திரளும்.

வெளிமாநிலத் தொழிலாளர் போராட்டம், போக்குவரத்தை கட்டுப்படுத்துதல், வாகனங்களை பறிமுதல் செய்தல், விழிப்புணர்வு பிரச்சாரம் என வழக்கமான கரோனா தடுப்புப் பணிகளில் போலீஸாரின் எண்ணிக்கையைக் குறைத்து டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பினால் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது பிரச்சினையாகிவிடும்.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மதுவுக்கு பெருமளவு செலவிட்டு அதனால் குடும்பம் மேலும் வறுமையின் பிடியில் சிக்கும்.

மீண்டும் அடிமையாவார்கள்

மது வாங்க பணம் கேட்டு வீட்டில் மனைவி, குழந்தைகளைத் துன்புறுத்தும் கொடூரமும் அரங்கேறும். அத்துடன் 40 நாட்கள் மதுவை மறந்து இருந்தவர்கள் மீண்டும் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாவார்கள்.

மேலும், தற்போதைய சூழலில் மது அருந்தினால் அவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து, வைரஸ் எளிதாக தொற்றும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க டாஸ்மாக் காரணமாக அமைந்துவிடும் என மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

இதுபோன்ற அபாயங்களைத் தவிர்க்க, மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றுசமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x