

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்ததில் இருந்தே 4 மாதக் குழந்தைக்கு தொப்புள் வழியே மலம் வெளியேறி வருகிறது. இதையடுத்து அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உதவினார்.
மானாமதுரையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாரி (28). அவரது மனைவி திவ்யா (22). இவருக்குக் கடந்த டிசம்பர் மாதத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தைக்கு தொப்புள் வழியே மலம் வெளியேறியது.
மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றோர் அனுமதித்தனர். ரூ.1 லட்சம் வரை செலவு செய்தும் குணமாகவில்லை. இதையடுத்து அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணம் இல்லாததால் குழந்தையைப் பெற்றோர் வீட்டிக்குக் கொண்டு வந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், அக்குழந்தைக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் அக்குழந்தைக்கு மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.
சில தினங்களுக்கு முன் பிறந்து 10 நாளே ஆன குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற ஆட்சியர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்தார். தற்போது மற்றொரு குழந்தைக்கும் உதவிய அவரது செயலுக்குப் பாராட்டு குவிந்து வருகின்றன.