ஊரடங்கால் உணவின்றித் தவித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராணுவ வீரர்கள்

மானாமதுரை கங்கையம்மன் குடியிருப்பில் தெருக்கூத்து கலைஞர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை ராணுவ வீரர்கள் வழங்கினர்.
மானாமதுரை கங்கையம்மன் குடியிருப்பில் தெருக்கூத்து கலைஞர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை ராணுவ வீரர்கள் வழங்கினர்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் ஊரடங்கால் உணவின்றித் தவித்தவர்களுக்கு ராணுவ வீரர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,058 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வேலைக்குச் செல்லாமல் இருப்பதால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு, உணவின்றித் தவித்து வருகின்றனர்.

மானாமதுரை, கட்டிகுளம், கிளங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர் ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் ஒருங்கிணைந்து வைகை பட்டாளம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பு மூலம் ஊரடங்கால் வேலையின்றி உணவிற்கு சிரமப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

முதற்கட்டமாக மானாமதுரை கங்கையம்மன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்களை வழங்கினர். அவற்றை மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் ராணுவவீரர்கள் வழங்கினர். இதேபோல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in