

தமிழகத்தில் இன்று புதிதாக 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. நேற்று வரை மாநிலத்தில் 4,058 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று (மே 5) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மட்டும் புதிதாக 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 279 பேருக்கும், கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 38 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 25 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மொத்தமாக, 20 மாவட்டங்களில் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று (மே 4) கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 56 வயதுள்ள ஆண் மற்றும் 60 வயதுள்ள பெண் ஆகிய இருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்று 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, இதுவரை 1,485 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2,537 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 828 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 65 ஆயிரத்து 191 தனிப்பட்ட நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமான தொற்றுக்குக் காரணம் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது என பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு சார்பாக 36 மற்றும் தனியார் சார்பாக 16 என 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. 3,198 பேர் கரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.