

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. அதில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பை தமிழக விவசாயிகளே சொந்தமாகவும், குத்தகைக்குப் பெற்றும் பராமரிக்கிறார்கள். அந்த நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்வதும் தமிழர்களே.
இதற்காக தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளாவுக்குச் சென்று வருவார்கள். அவர்களுக்கென அதிக அளவில் ட்ரக் வாகனங்கள் இயக்கப்படுவதும் உண்டு. பொது முடக்கத்தால் தமிழகம்- கேரளா இடையே எல்லை மூடப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகிறது. அங்குள்ள தோட்டங்களுக்கு தமிழக விவசாயிகளும், தொழிலாளர்களும் சென்றுவர அனுமதிக்கப்படவில்லை.
பால், காய்கனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்கிற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கிறார்கள். சரக்கு வாகனங்கள் செல்லலாமே தவிர, மனிதர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் ஏலத் தோட்டத்தை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தார்கள்.
தற்போது தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளது. தனியார் கடைகள் தொடங்கி டாஸ்மாக் வரையில் திறக்கலாம் என்று அறிவித்துவிட்டது தமிழக அரசு. விவசாயப் பணிகளுக்கு எந்தத் தடையுமில்லை என்றும் அரசு கூறிவிட்டது. ஆனால், இந்த விதி கேரளத்தில் ஏலக்காய் விவசாயம் செய்யும் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் பொருந்தாதுபோல. அதனால்தான் இரு மாநில அரசுகளும் தொடர்ந்து அவர்களை முடக்கி வைத்துள்ளன.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள், "கேரளாவின் இடுக்கி மாவட்டம் கரோனா ஒழிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சிவப்பு மண்டலமாக இருந்தபோது, தடை விதித்தது நியாயம். இப்போது தேனி மாவட்டத்தில் நோய்த் தொற்று அடியோடு குறைந்துவிட்டது. ஆரஞ்சு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனியாவது விவசாயிகள் கேரளா செல்ல அனுமதி பெற்றுத் தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
"கோடை காலத்தில் ஏலக்காய்ச் செடிகளை நோய் தாக்கும் என்பதால், மருந்து மற்றும் உரம் போடுதல் போன்ற பணிகளை அவசியம் செய்தே ஆக வேண்டும். எனவே, குறைந்தபட்சம், இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து பேசி, இந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கவாவது ஏற்பாடு செய்ய வேண்டும்" என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.