Published : 05 May 2020 07:32 PM
Last Updated : 05 May 2020 07:32 PM

பாரத் நெட் டெண்டர் விவகாரம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொய் அறிக்கை விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்; ஐ.பெரியசாமி விமர்சனம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொய் அறிக்கை மட்டுமின்றி திரித்தும் அறிக்கை விடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஐ.பெரியசாமி இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக அரசின் ரூ.1,851 கோடி ரூபாய் பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முழுப்பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயற்சித்திருப்பது வேடிக்கையாகவும் அவர் மனதிற்குள்ளே சிரித்துக் கொள்வதை வெளிப்படுத்துவது போலவும் அமைந்திருக்கிறது.

மார்ச் 2021-க்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது என்று ஒரு சாக்கு கூறியிருக்கிறார் அமைச்சர். இதுவரை எத்தனை டெண்டர்களில் இப்படி காலக்கெடுவைக் கடைப்பிடித்திருக்கிறார் அமைச்சர்?

இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் 14.9.2015 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை 4 வருடங்கள் 6 மாதங்கள் ஓடி விட்டன. ஏறக்குறைய 50 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது ஊரடங்கு நேரத்தில் பிழை திருத்தப் பட்டியலை அவசர அவசரமாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

மத்திய அரசின் கெடு என்பதை விட இந்த டெண்டரில் ஒளிந்திருப்பது, அமைச்சர் தனது நாற்காலியை விட்டுப் போகும் முன்பு இந்தத் திட்டத்தில் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்ற ரகசிய நோக்கம் தானே! அதுதானே உண்மை!

பாரத்நெட் டெண்டரின் ஒட்டுமொத்தக் குழப்பமும் முறைகேடுகளும் அரசு கஜானா மூலம் திரவியம் தேட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் உருவானதுதானே! அமைச்சர் உதயகுமார் இதை இல்லையென்று மறுக்க முடியுமா?

திமுக தலைவர் மத்திய அரசின் கடிதத்தில் உள்ள அதுவும் 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த அதிர்ச்சி தரும் விவரங்களை தனது அறிக்கையில் விரிவாகக் கூறியிருக்கிறார். மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, தமிழக அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டான்பிநெட் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு எழுதியுள்ள 30.4.2020-ம் தேதியிட்ட அந்தக் கடிதத்தின் பத்தி 5-ல், புகாரின் மீது மத்திய அரசின் மூன்று துறைச் செயலாளர்கள் தலைமையிலான கமிட்டி முடிவு எடுக்கும் வரை டெண்டரை முடிவு செய்யக்கூடாது என்று மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை டெண்டரை மூடியிருக்கும் ஊழல் மேகம் மறைப்பதால், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கு கடிதத்தின் அர்த்தம் புரியாமல் இருக்கலாம். மாநிலத் தலைமைச் செயலாளரையோ அல்லது அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஊரடங்கு நேரமான 15.4.2020 அன்று பிழை திருத்தப் பட்டியல் வெளியிட்ட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரையோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே?

கடிதத்தில் உள்ள வாசகங்களின் அர்த்தமே தெரியாமல் பாரத் நெட் திட்டத்திற்குத் தடை விதிக்கவில்லை என்று அமைச்சர் கோயபல்ஸ் பாணியில் கூறியிருப்பதைப் பார்த்தால் பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கள் என்று திமுக தலைவர் அடிக்கடி அதிமுக அமைச்சர்களைப் பார்த்துச் சொல்லும் கூற்றுதான் என் நினைவுக்கு இப்போது வருகிறது.

அமைச்சர் உதயகுமார் சொல்வது போல் இந்த டெண்டரில் ஒன்றுமே நடக்கவில்லை என்றால், விரிவான அறிக்கையை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம் என்று பொய்யயுரைக்கு இடையிலும் ஒரு மெய்யுரையை தனது அறிக்கையில் நிகழ்த்தியிருப்பது ஏன்?

திமுக தலைவர் பாரத் நெட் திட்ட முறைகேடுகள் குறித்து அறிக்கை விட்டபோதெல்லாம் அமைச்சர் பதில் அளித்திருப்பது உண்மைதான். ஆனால் அந்த பதில்கள் எப்படியிருக்கின்றன? 'அந்த வாழைப்பழம்தான் அண்ணே இந்த வாழைப்பழம்' என்ற பிரபலமான கவுண்டமணி - செந்தில் காமெடியை மிஞ்சும் அளவில் அல்லவா இருக்கிறது?

கமிஷன் – கரெப்ஷன் - கலெக்ஷன் மோகத்தில் இருக்கும் அமைச்சர் காமெடி அடிக்கலாம். 'அண்ணாவின் வழியில் எடப்பாடி', 'கரிகால் சோழனுக்குப் பிறகு எடப்பாடி', 'உலகின் எட்டாவது அதிசயம் எடப்பாடி' என்றெல்லாம் தன் கற்பனைக்கு எட்டியவாறு எல்லாம் மேடைகளில் புகழலாம்.

ஆனால், பாரத் நெட் திட்டத்திற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு முத்திரையுடன் உள்ள கடிதத்தில் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நிச்சயம் அவரால் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. அப்படிச் செய்ய நினைத்தால் 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட' கதையாகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரும், முதல்வரும் இணைந்து அள்ளித் தெளித்த அவசர கோலமாக ஊரடங்குக்குள் ஓர் ஊரடங்கு பிறப்பித்து இன்றைக்கு கோயம்பேடு மார்க்கெட் சீனாவின் வூஹான் மார்க்கெட் என்று பத்திரிகைகள் செய்தி போடும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆன பிறகும் பேரிடர் துறைக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் உதயகுமார் தமிழ்நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று கூறுவது பேரிடரிலும் செய்யும் கொடூரமான நகைச்சுவை.

நேற்றைய தினம் நேராக அழைத்து கண்டனம் செய்த ஆளுநரே மன்னித்தாலும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஒருநாள் ஊரடங்கு மூலம் ஒரு மாத ஊரடங்குப் பயனுக்கு உலை வைத்துவிட்டு, கரோனாவிலிருந்து விடுபட்ட மாவட்டங்களை எல்லாம் இன்றைக்குக் கொத்துக் கொத்தாக அந்த நோய்க்கு உள்ளாக்கி விட்டு, தமிழ்நாட்டின் தலைநகரை பீதிக்குள்ளாக்கியிருக்கும் முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொய் அறிக்கை மட்டுமின்றி திரித்தும் அறிக்கை விடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x