

வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று (மே 5) முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிகாரிகள் மத்தியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன். புறநகர் மாவட்டப் பகுதியில் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 50 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு 12 ஆயிரம் பரிசோதனைகள் செய்கிறோம். இதனால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மீண்டும் சில தொழில்களைத் தொடங்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் இங்கேயே இருந்து பணிபுரியலாம். தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல விருப்பம் உள்ள தொழிலாளர்கள் அதற்கென அமைக்கப்பட்ட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களுக்கே சென்று கணக்கெடுக்க வேண்டும். வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களை இரவு 10 மணிக்கு மேல்தான் ரயில்களில் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பகலில் போக்குவரத்து நெரிசலில் அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. எந்தெந்த மாநிலங்களுக்கு எப்போது ரயில் புறப்படும் என்பதைத் தெளிவாக அவர்களிடத்தில் சொல்ல வேண்டும். இதனை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை மொத்தமாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியாது. படிப்படியாக அவர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்திற்குள் அனைவரையும் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும்போது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இவற்றைச் செய்தாலே நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.
அம்மா உணவகங்கள் மூலம் தமிழகத்தில் 7 லட்சம் பேருக்கும், சமூக கிச்சன்கள் மூலமாக சுமார் 2 லட்சம் பேருக்கும் உணவு அளிக்கப்படுகிறது. முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் யாரும் பட்டினி இல்லை.
தமிழகத்தில் சுமார் 36 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மே, ஜூன் மாதங்களுக்கும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அரசு சொல்வதை மக்கள்பின்பற்ற வேண்டும் என இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.