Last Updated : 05 May, 2020 04:35 PM

Published : 05 May 2020 04:35 PM
Last Updated : 05 May 2020 04:35 PM

படிப்படியாக மதுவிலக்கு என்றது பச்சைப் பொய்!-புதிய தமிழகம் கிருஷ்ணசாமி காட்டம்

மே 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், ‘படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தமிழக அரசு சொன்னது எல்லாம் பச்சைப் பொய்யா?’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''கரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 40 நாட்களாக அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. பொது முடக்க நடவடிக்கைகள் மிகப்பெரிய சிரமங்களைக் கொடுத்தாலும் கூட, டாஸ்மாக் கடைகளை மூடியது தமிழகப் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல, பெரும்பாலானோர் மத்தியிலும் ”கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது” என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இனிமேல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறக்காது என்றே அனைத்து மக்களும் எதிர்பார்த்தார்கள். குறிப்பாக, கரோனா அழிக்கப்படும் வரை மதுபானக் கடைகள் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என உளம் மகிழ்ந்தார்கள். ஆனால், தமிழக மக்களுடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக, வரும் ஏழாம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பதை முற்றிலும் தவறானதாகவே கருதுகிறோம்.

பொது முடக்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் ஒரு புதிய சூழலுக்கு தயார்படுத்தியிருந்தது. குடிக்காமல் இருக்க முடியும் என மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் மதுபானக் கடைகள் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்குமேயானால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சக்கணக்கான இளைஞர்களும், நடுத்தர வயதினரும் அதிலிருந்து முற்றாக விடுதலை பெற்றிருப்பார்கள்.

ஏறக்குறைய, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு குடிப்பழக்கம் அற்ற தமிழ்ச் சமுதாயத்தைக் கண்ணில் காண்பதற்கான அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கும். இந்த அரிய வாய்ப்பை எடப்பாடி அரசு நழுவ விட்டுவிட்டதாகவே கருதுகிறேன். மேலும், படிப்படியாக மதுபானம் தமிழகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்படும் என்று மக்கள் மன்றத்திலும், சட்டப்பேரவையிலும் இவர்கள் சொல்லி வந்ததும் பச்சைப் பொய் என தெரிகிறது.

கரோனா தொற்று கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா முற்றாக ஒழிக்கப்பட பல மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். இந்நிலையில், டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவால் பல்வேறு புதிய தீமைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கரோனாவை எதிர்கொள்ளக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படும். மளிகைக் கடைகளிலும், காய்கனிக் கடைகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள், மதுக்கடைகளில் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்?

கரோனாவை ஒழிப்பதற்கான முதல் கட்டுப்பாடு ஏழாம் தேதியோடு காற்றில் பறக்கவிடப்படும். கோயம்பேடு காய்கனி மார்க்கெட் எப்படி கரோனா தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்ததோ அதுபோல, இனிமேல் டாஸ்மாக் கடைகளும் கரோனா உற்பத்தித் தளங்களாக மாறலாம்.

கரோனாவை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என்பது மருத்துவ விதி. மதுபானம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பது மதுபான விதி. எனவே, டாஸ்மாக்கால் கரோனா புத்துயிர் பெறும் என்பது புது விதி ஆகும். மது குடிக்க பார்கள் திறக்கப்படாது. அவர்கள் எங்கே குடிப்பார்கள்... வீதியிலா? அல்லது வீட்டிலா? வீட்டில் குடிக்க குடும்பம் அனுமதிக்குமா? குடித்த பின் அங்கு அமைதி நிலவுமா?

ஒன்றரை மாத காலம் யாருக்கும் வேலை இல்லை. பெரும்பாலான மக்கள் பசியோடும், பட்டினியோடும் இருக்கிறார்கள். தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. மதுபானம் வாங்க வழி என்ன? ஒன்று கடனாளியாக வேண்டும். இல்லையென்றால், குடும்ப உண்டியலில் கை வைக்க வேண்டும். இது போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் குடும்பத்திற்குள் எழ வாய்ப்பு உண்டு.

மேலும், குடித்தவர்களுடைய உடலின் பல உறுப்புகள் பழுதுபடக்கூடிய வாய்ப்பு உள்ளதால் கரோனா இவர்களை எளிதாகத் தாக்கும். குடித்தவர்கள் அறிகுறிகளே இல்லாமல் எளிதில் நோய்களைப் பரப்பக் கூடியவர்களாக வலம் வருவார்கள். அதுமட்டுமல்ல, வீடுகளிலும், வீதிகளிலும், சமுதாயத்திலும், சண்டைகளும் சச்சரவுகளும் மேலோங்கும். காவல்துறை பொது முடக்க உத்தரவை அமலாக்குமா? அல்லது இதுபோன்ற குடிகாரர்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமா?

அரசு ஒரே ஒரு காரணத்தைச் சொல்லக்கூடும். டாஸ்மாக்கில் கிடைக்கக்கூடிய வருமானம் குறைகிறது என்பதே அரசின் கருத்தாக இருக்கும். அரசினுடைய பக்கம் நியாயம் இருப்பதாகக்கூட வைத்துக் கொள்வோம். ஆனால், கடந்த 45 நாளில் முழு முடக்கத்தால் லட்சக்கணக்கான கோடி ரூபாய் இந்திய நாட்டுக்கும், தமிழகத்திற்கும் இழப்பு ஏற்பட்டிருப்பினும் கரோனா என்ற கொள்ளை நோயைத் தடுப்பதற்காகத்தான் இத்தனை கஷ்டங்களையும், இந்திய மக்கள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் இந்த கொள்ளை நோயில் இருந்து விடுபடுவதற்கான வெளிச்சம் கண்களுக்கு தென்படவில்லை. தமிழக அரசு மதுக்கடைகளைத் தமிழகத்தில் திறக்கும் பட்சத்தில் அதுவும் கரோனா நோயை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணியாக விளங்கும். மற்ற மாநிலங்களில் செய்த தவறை தமிழ்நாடும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

டாஸ்மாக் இழப்பை சரிகட்ட பல வழிகள் அரசுக்கு உண்டு. அரசின் தேவையற்ற பல செலவுகளை குறையுங்கள். இம்மியளவும் ஊழல் இல்லாத அளவில் அனைத்துத் துறைகளிலும் டெண்டர்களை வெளிப்படையாக்குங்கள். பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்காத அனைத்து இலவசத் திட்டங்களையும் முற்றாக நிறுத்தி வையுங்கள்.

டாஸ்மாக்கை முற்றாக ஒழித்து, கரோனாவையும் முற்றாக ஒழித்து தமிழக மக்களை காப்பாற்றுவதா? அல்லது மீண்டும் தமிழக மக்களை மதுவாலும், இலவசங்களாலும் மூழ்கடித்து, கரோனாவைத் தமிழக மக்களோடு இரண்டறக் கலக்க வைப்பதா? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். மக்களுக்காக மதுவை இழக்கலாம். மதுவுக்காக மக்களை இழக்க கூடாது; இயலாது; முடியாது''.

இவ்வாறு தனது அறிக்கையில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x