

ஊரடங்கு காலத்தில் வீணாக பொழுதைக் கழிக்காமல் 25 ஆண்டுகளாக குப்பை மேடாக காட்சியளித்த கிணற்றை 25 அடி ஆழத்திற்கு தூர்வாரி தண்ணீர் எடுத்துள்ளனர் விருதுநகர் இளைஞர்கள்.
விருதுநகர் முத்தாள் நகர் உலகநாதன் தெருவில் 120 குடியிருப்புகள் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. ஆனால், தண்ணீர் வற்றியதால் இக்கிணறு பயன் இல்லாமல் குப்பை கொட்டும் இடமாக மாறியது. கடந்த 25 ஆண்டுகளாக குப்பை மேடாக காட்சியளித்த இப்பொதுக் கிணறு கடும் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் தூர்வாரப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், பல்வேறு உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸை கட்டுப்படும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளைத் தவிர பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதனால், விருதுநகர் முத்தாள் நகர் உலகநாதன் தெருவில் வீணாக பொழுதைக் கழிக்க விரும்பாத இளைஞர்கள் 20 பேர் இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக குப்பை மேடாக காட்சியளிக்கும் பொதுக் கிணறை தூர்வார முடிவு செய்தனர்.
அதன்படி, இளைஞர்கள் 3 குழுக்களாகப் பிரிந்து 3 ஷிப்டுகளாக கிணற்றைத் தூர்வாரும் பணியை தனிமனித இடைவெளியுடன், அதாவது குறிப்பிட்ட இடைவெளியில் நின்று இளைஞர்கள் தூர்வாரும் பணியை கடந்த 20 நாள்களாக மேற்கொண்டனர்.
தற்போது இக்கிணற்றில் 25 அடி ஆழம் தோண்டியபோது தற்போது கிணற்றில் நீர் ஊற்று ஏற்பட்டது. இதனால் இளைஞர்களும் அப்பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பலர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து பார்த்து, தூர்வாரிய இளைஞர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தும் வருகின்றனர்.
இதுகுறித்து, கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் வீணாக பொழுதைக் கழிக்காமல் கிணற்றை தூர்வார திட்டமிட்டோம். சுமார் 20 டன் அளவுக்குக் குப்பைகளை எடுத்துள்ளோம். 20 நாள் உழைப்புக்குத் தற்போது பலன் கிடைத்துள்ளது. மேலும், 5 அடி ஆழம் தோண்டினால் தண்ணீர் நன்றாக வரும். ஒரு வாரத்தில் அதையும் செய்து முடிப்போம்" என பெருமையகக் கூறினர்.