Published : 05 May 2020 11:39 AM
Last Updated : 05 May 2020 11:39 AM

அரசின் தளர்வு கரோனா தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடாது: ஸ்டாலின்

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில், 'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு நினைக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அச்சம் தருவதாகவும், அதிர்ச்சியை ஊட்டுவதாகவும் பீதியை ஏற்படுத்துவதாகவும் மாறிக் கொண்டு இருக்கிறது. பத்து, இருபதாக அதிகரித்த எண்ணிக்கை முந்நூறு, நானூறாக அதிகரித்து வருவது எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று கணிக்க முடியாததாக இருக்கிறது.

ஊரடங்கு, முழு ஊரடங்கு என அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது போலக் காட்டினாலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகப்படியான பரிசோதனைகள் செய்யப்படுவதால் இவை வெளியில் தெரிய வருகிறதா அல்லது நோய்ப் பரவல் தடுக்கப்படவில்லையா என்பது புதிராகவே உள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் செய்யப்படும் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கையைத் தமிழக அரசு வெளியிடுகிறது. இதனை மொத்த எண்ணிக்கையாக மட்டுமில்லாமல், மாவட்ட வாரியாக எவ்வளவு பேருக்கு அன்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டது என்பதையும் அரசு விளக்கமாக வெளியிட வேண்டும்.

ஆரம்பத்தில் கரோனா தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் இப்போது பரவி வருவதாக எண்ணிக்கைகள் காட்டுகின்றன என்றால், எப்படிப் பரவியது? அல்லது, பல மாவட்டங்களில் அப்போது பரிசோதனையே செய்யாமல் இப்போது செய்வதால் வெளியில் தெரிய வருகிறதா? என்பதையும் அரசு விளக்க வேண்டும்.

இவையெல்லாம் ஏதோ அரசாங்க ரகசியங்கள் அல்ல; மக்கள் தெரிந்துகொண்டு, அன்றாட நடைமுறைகளை எச்சரிக்கையுடன் அமைத்துக்கொள்ள உதவும் செய்திகள்தான். ஏனென்றால், மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்; இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை அரசு அறிவிக்கும் போதெல்லாம், 'எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்தீர்கள்?' என்ற கேள்வியை நான் எழுப்பி வந்தேன். பரிசோதனைகள் செய்யச் செய்யத்தான் இவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வருகின்றன.

எனவே, நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இணையானது நோய் வராமல் தடுப்பது. அத்தகைய தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். போர்க்காலத்தைவிட இது பேரச்சம் தருகின்ற பேரழிவுக் காலமாக இருக்கிறது.

எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை முன்கூட்டியே எடுங்கள், முன்கூட்டியே மக்களுக்கு அறிவியுங்கள் என்பதையும் சொல்லி வந்தேன். மார்ச் 24-ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், பெருங்களத்தூர், தாம்பரம் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியதும், ஏப்ரல் 25-ம் தேதி கோயம்பேடு காய்கறி அங்காடியில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியதும், அரசாங்கத்தின் திட்டமிடுதலிலும் செயலாக்கத்திலும் இருந்த மெத்தனமும் அலட்சியமுமே தவிர, மக்களைக் குறை சொல்ல முடியுமா?

போதுமான கால அவகாசம் கொடுத்து, அரசு சரியான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து மார்ச் 25 முதல் தொடங்கிய ஊரடங்கும், ஏப்ரல் 26 தொடங்கிய முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இந்த நிலைமையைப் பெருமளவுக்கு தவிர்த்திருக்கலாமே?

இன்றைக்கு 'கோயம்பேடு' மீது முழுப்பழியையும் போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 25 அன்று பல்லாயிரக்கணக்கில் கூடியதும், தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மொத்த மற்றும் சிறுவியாபாரிகளை தனிமனித இடைவெளி இல்லாமல் கூட விட்டதும்தான் அரசாங்கம் செயல்படும் அழகா? சென்னை மாநகரத்தில் காவல்துறை ஆணையரகம் இருக்கிறதா? அல்லது அதுவும் மூடி சீல் வைக்கப்பட்டு விட்டதா?

மே 1-ம் தேதி சென்னைக்கு எனச் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மண்டல வாரியாக ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்தே அதிகமாகி வந்தது. அப்போதே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்க வேண்டும். கரோனா கட்டுக்கடங்காமல் ஆனபிறகு கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு அதிகாரி போடுவதால் என்ன பயன்?

அதோடு, வரும் 7-ம் தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளது அரசு. அப்படியானால் ஊடரங்குக்கு உண்மையான பொருள் என்ன என்பதையும் அரசுதான் விளக்க வேண்டும்.

அரசுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னால் கோபம் வருகிறது. ஆனால் இதுபோன்ற சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத் திறனும் இல்லாததாக தமிழக அரசு இருப்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது!

அதேபோல் ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் பெருமளவு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களிலும் நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடிவருகிறது. இந்த மண்டலங்கள் அனைத்துக்கும் தனித்தனியாக சிறப்புக் கவனத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும்.

பொதுவாகப் பேரிடர் காலங்களில் முதலில் ஒருங்கிணைப்புக் குழு போடுவார்கள். அரசும், மருத்துவத்துறையும், காவல்துறையும், தன்னார்வத் தொண்டர்களும், சமூக ஊழியர்களும் அதில் இடம் பெறுவார்கள். இந்தப் பேரிடர் காலத்தில் அப்படிப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவே நியமிக்கப்படவில்லை.

மக்கள் தேவையை அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும் சமூக அமைப்பினரும் நிறைவு செய்ய, அரசும் மருத்துவத் துறையும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் வகையிலான கட்டமைப்பு அது. அந்த அடிப்படை ஏற்பாட்டைக் கூடச் செய்யாமல் போனதால்தான் மக்கள் தங்கள் தேவைக்காக வீதிக்கு வர வேண்டியதாக இருக்கிறது.

பொதுமக்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே தேவைகள் பூர்த்தியானால் எதற்காக வெளியே வரப்போகிறார்கள்?

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அரசு இதுவரை சிந்திக்கவில்லை. அதனால்தான் வெளியில் வருகிறார்கள் மக்கள்.

கரோனா பரிசோதனைகள்கூட, அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. அதற்கும் அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரவேண்டி உள்ளது. மொத்தமாக மக்கள் கூடுவதற்கான தேவையை அரசே ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற செயல்களைத் தவிர்த்தாலே மக்கள் கூடுவதைத் தவிர்க்கலாம். கரோனா பரவாமலும் தடுக்கலாம்.

சென்னையில் ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் மக்கள் மிகமிக நெருக்கமாக வசித்து வருகிறார்கள். அதேபோல் கூவம் கரையோர மக்கள், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் என இவர்களைச் சிறப்புக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் அளிப்பதும் அவர்களை நோயிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையாக இருக்கும்.

'வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள்' என்று அவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியாது. ஒரே வீட்டுக்குள் மொத்தமாக, ஒரே தெருவுக்குள் ஏராளமாக அடைந்து வாழ்பவர்களுக்குத் தற்காலிக மாற்று இடங்கள் தரப்பட்டு தங்கவைக்கப்பட வேண்டும்.

இத்தகைய சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் செய்து, 'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு நினைக்கிறது. கரோனா கட்டுக்குள் வரவில்லை என்பதையே நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை காட்டுகிறது. அரசின் தளர்வு, இந்த எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடாது.

மக்களைக் காக்க வேண்டிய தமிழக அரசு, அரசியல் உள்நோக்கமற்று, தீர ஆலோசித்து, பலதரப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, விரைந்து சிந்தித்து ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். மக்களின் உயிர் மகத்தானது. அதனை அரசியலால், அறியாமையால், ஆணவத்தால் இழந்துவிடக்கூடாது" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x