

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சாலைகளில் நேற்று வழக்கம்போல் வாகனங்கள் இயக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் செல்போன், ஹார்டுவேர் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பல்வேறு வகையான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அக்கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் வெளியில் வருவது அதிகரித்திருந்தது. வழக்கம்போல் சாலைகளில் வாகனங்கள் இயக்கமும் அதிகரித்திருந்தது.
சென்னை அண்ணா சாலைமுதல் சின்னமலை வரை ஏற் படுத்தப்பட்டிருந்த சாலை தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதேபோன்று, பல்வேறு மாநகரங்கள், நகரப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதால் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
காய்கறி விற்கும் ஜவுளி கடைகள்
சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில்,காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை நேற்றுதொடங்கப்பட்டது. இதுதொடர்பாக கடைக்காரர்கள் கூறும்போது,“எங்கள் கடை ஊழியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் தேவை அதிகரித்துள்ளது. எனவே, தற்போது காய்கறி மற்றும் மளிகை பொருட்களை விற்கிறோம். வீடுகளுக்கே கொண்டு சென்றும் டோர் டெலிவரி செய்கிறோம்” என்றனர்.
தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் செல்போன் விற்பனை கடைகள், செல்போன் பழுதுபார்க்கும் கடைகள், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பழுது பார்க்கும்கடைகள், கொசு பேட் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக செல்போன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், புதிய போன்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு உரிய ஆவணங்களைக் காட்டி, அவரவர் மாவட்டத்துக்குள் பயணிக்கலாம் என்றும், அதற்கென தனியாக பாஸ் வாங்கத் தேவையில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.