

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராம.துரைமுருகன் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தலைமை வகித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் 1.50 லட்சத்தும் அதிகமான சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின் றன. இவற்றில் 5 லட்சம் தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 40 சதவீத தொழிலாளர் கள், அந்தந்த தொழிற்சாலை வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களில் எந்த தொழிலும் தொடங்க அனுமதிக்கப்படமட்டாது. ஸ்பின்னிங், பவுண்டரி, வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப்செட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி செயல்படலாம். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். நகரப் பகுதிகளில் உள்ள தொழிற் பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
இதேபோல, அனைத்துப் பிரிவு நிறுவனங்களும் வரை யறுக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட வேண்டும். கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளும் விதி களுக்கு உட்பட்டு நடைபெறும்.
பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏ.சி.மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர். அச்ச கங்கள் செயல்பட அனுமதிக்கப் படுகிறது. கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்கள், மின் சாதன விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றுக்கான போக்குவரத்து செயல்படலாம்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.