சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிச்சீட்டு கோரி வேலூரில் வட மாநிலத்தவர்கள் திடீர் போராட்டம்: எஸ்பி பிரவேஷ்குமார் பேச்சுவார்த்தை

வட மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.   படம்: வி.எம்.மணிநாதன்
வட மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்
Updated on
1 min read

சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிச்சீட்டு வழங்கக் கோரி வேலூரில் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை போலீஸார் விரட்டினர்.

பணிக்காகவும், சிகிச்சைக்காகவும் வேலூர் மாவட்டத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிட வசதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 பேர் உரிய அனுமதியுடன் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், வெளி மாநிலங்களில் தங்கியுள்ளவர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து, வேலூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர் 500-க்கும்மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டு உடனடியாக அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும் என்று கோரினர்.

சமூக இடைவெளி இல்லாமல் திரண்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வேலூர் மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் பேசும்போது, ‘‘சொந்த மாநிலம் செல்ல விரும்புபவர்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்தால் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவர்’’ என்றார்.

இதை ஏற்காத சிலர் உடனடியாக அனுமதிச்சீட்டு வழங்கக் கோரி கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் அங்கிருந்துவிரட்டினர். வெளி மாநிலத்தவர்கள்இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க 3 தனியார் திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in