

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீத தொழிலாளர்களுடன் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசுஅலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். ஊரக மற்றும் பேரூராட்சிபகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், மின்னணு வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், ஒருங்கிணைந்த நூற்பாலைகள், ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவை 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரத்தில் செல்போன், கணிப்பொறி பழுதுநீக்கம், வீட்டு உபயோகப் பொருள்கள், மின்மோட்டார் ரிப்பர், கண் கண்ணாடிவிற்பனை உள்ளிட்ட கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்மட்டும் வழங்கலாம் என்று ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித் துள்ளார்.
கல்பாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும்இப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டதால், கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், எலட்ரிக்கல் கடைகள், செல்போன் போன் ரீசார்ஜ் கடைகள், வாகன மெக்கானிக் கடைகள் உள்ளிட்டவை குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டன.