

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சென்னையில் 144 தடை உத்தரவு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பு:
கரோனா வைரஸ் பரவலைத்தடுக்கும் வகையில் தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144(4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொது இடங்களில்5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும். எனவே, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள மே 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைசட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த ஆணை பொதுமக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொதுஅமைதியை நிலை நாட்டும்பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.