

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு குறித்து செய்யப்படும் பிரச்சாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:
டீசல் மற்றும் பெட்ரோல் மீது மாநில வரி விதிப்பை 3.5.2020 அன்று மாற்றி அமைத்ததின் காரணமாக மாநில அரசிற்கு ஓராண்டிற்கு ரூபாய் 25,000 முதல் ரூபாய் 30,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்கிற ஒரு தவறான செய்தி சில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
டீசல் மற்றும் பெட்ரோல் மீதான மாநில வரியை மாற்றி அமைத்ததின் காரணத்தினால், தற்போதுள்ள நுகர்வின் அடிப்படையில், டீசல் விலை ரூ.2.50 மற்றும் பெட்ரோல் விலை ரூபாய் 3.25 மட்டுமே உயரும். எனவே, தற்போது மாநில அளவில் உள்ள பெட்ரோல், டீசல் நுகர்வின் அடிப்படையில் மாநில அரசிற்கு ஓராண்டிற்கு மொத்தமாக ரூபாய் 2500 கோடி வரை மட்டுமே கூடுதல் வரிவருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்புமுறை மாற்றி அமைக்கப்பட்டதினால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலைகுறையும் போது மாநிலத்தின் வருவாயிற்கு ஏற்படும் பாதிப்பு ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படும். அதேசமயம் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும்போது, நுகர்வோர் மீது வரிவிதிப்பின் மூலம் ஏற்படும் கூடுதல் சுமையும் குறையும்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.