

தமிழக அரசின் இ-பாஸில் விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்காமல் உள்ளதால், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மகள் சிகிச்சைக்கு மதுரை செல்ல அனுமதி கேட்டு பெற்றோர் காத்திருந்தனர்.
கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த சலவை தொழிலாளி ஆறுமுகம். இவரது மகள் லட்சுமி பிரியா(13). இவர் இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிறந்த 5 மாதம் முதல் உப்பு சத்து அதிகமாகி, கிட்னி பிரச்சினை இருந்துள்ளது.
இதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தினமும் மாத்திரை எடுத்து வருகிறார். மாதம் ஒருமுறை பரிசோதனைக்கு மதுரை சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், மாணவி லட்சுமி பிரியாவுக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் உப்பு சத்து அதிகமாகி, கிட்னி பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அவருக்கு வயிறு வீங்கி, தண்ணீர் குடிக்க முடியாமல், இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக மதுரை செல்ல வேண்டி ஆறுமுகம், பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் மூலம் தமிழக அரசின் இ-பாஸ் மின்னஞ்சல் முகவரியில் நேற்று முன்தினம் விண்ணப்பித்தார். அதில், நேற்று வரை மனு காத்திருப்பில் உள்ளது என வந்தது. அவசர சிகிச்சை என்பதால் மதுரைக்கு செல்ல அனுமதி கேட்டு ஆறுமுகத்தின் மனைவி முத்துமாரி, மகள் லட்சுமி பிரியா ஆகியோருடன் ஆசிரியர் ஜெயக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதால், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நீண்ட நேரம் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். அப்போது வந்த அலுவலர்கள் நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தனர். இதனால் அவர்கள் செய்வதறியாது திரும்பி சென்றனர்.
இதுகுறித்து முத்துமாரி கூறும்போது, தமிழக அரசின் இ-பாஸ் முறையில் வெளியூர்களுக்கு செல்ல அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அந்த மின்னஞ்சல் முகவரி வேலை செய்யவில்லை. நேற்று விண்ணப்பித்தோம். இதுவரை அனுமதி வழங்காமல் காத்திருப்பில் (பெண்டிங்) உள்ளது என வருகிறது. எனது மகளின் அவசர சிகிச்சைக்கு நான் என்ன செய்வது என்று தெரியவில்லை, என்றார் அவர்.
இதே போல், மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்த இளைஞர் ஒருவருக்கு இன்று (5-ம் தேதி) வேலையில் இணைய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் நேற்று முன்தினம் இ-பாஸில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை எந்தவித அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவரும் கேட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பினார்.
அவர் கூறுகையில், நான் ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வேறு மென்பொருள் நிறுவனத்துக்கு தேர்வாகி உள்ளேன். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்கள் என்னை வந்து, நாளை (5-ம் தேதி) வேலையில் இணைந்துவிட்டு, மடிக்கணினியை பெற்றுச்செல்லும்படி கூறினர். ஆனால், இ-பாஸில் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை, என்றார்.