

வெளி மாவட்டங்களில் இருந்து கோவில்பட்டிக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்ற வந்த லாரி ஓட்டுநர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கோவில்பட்டிக்கு வரும் லாரி ஓட்டுநர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, நேற்று முதல் கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு பண்டல்கள் ஏற்றுவதற்கு லாரிகள் வரத்தொடங்கின. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை 8 லாரிகள் வந்தன. அந்த லாரிகள் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.டி.எம். கலை கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டன.
அதிலிருந்த ஓட்டுநர்களுக்கு சளி, ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் லாரிகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில்பட்டியை சேர்ந்த மாற்று ஓட்டுநர்கள் மூலம் லாரிகள் சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றச்சென்றன. இந்த பணி 24 மணி நேரமும் நடைபெறும். சளி, ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவில், எந்தவித பிரச்சினை இல்லையென்றால், அந்த ஓட்டுநர்கள் லாரிகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இல்லையென்றால், அவர்கள் சிகிச்சை அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.