Last Updated : 04 May, 2020 06:55 PM

 

Published : 04 May 2020 06:55 PM
Last Updated : 04 May 2020 06:55 PM

ஊரடங்கினால் கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா ரத்து: வீடுகளில் சிறப்பு பூஜை நடத்த முடிவு

கூடலூர்

ஊரடங்கினால் கண்ணகி கோயில் சித்திரா பவுர்ணமி விழா நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே மே 7-ம் தேதி தங்கள் வீடுகளிலே பூஜை வழிபாடுகளை நடத்த பக்தர்கள் முடிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணாத்திப்பாறையில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது.

கோவலன் கொலை செய்யப்பட்ட துக்கத்தில் மதுரையை எரித்த கண்ணகி வைகை கரையோரமாக இங்கு வந்ததாக சிலப்பதிகார பதிவில் உள்ளது.

இந்த இடத்தில் கோவலன் கண்ணகிக்கு மங்களநாண் பூட்டி விண்ணிற்கு புஷ்பரதத்தில் அழைத்துச் சென்றதாக ஐதீகம். கண்ணகிக்கான பழங்கால சிற்பங்களும் இங்கு உள்ளன.

இலக்கியச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கான பாதை கேரளப்பகுதியில் உள்ளது. இதனால் அம்மாநில வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனவே ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாத பவுர்ணமி அன்று மட்டுமே இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது கரோனா பாதிப்பு உள்ளதால் குறைந்தபட்ச பக்தர்களுடன் ஆகமவிதிப்படி விளக்கு ஏற்றி வழிபாடுகள் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இருப்பினும் தற்போது ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால்இந்த ஆண்டு திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சித்ராபவுர்ணமி( மே 7) அன்று கண்ணகி கோயில் பூஜை வழிபாடுகளை அவரவர் வீடுகளிலேயே நடத்த பக்தர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து கற்புக்கரசி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் கோபால்ராயர், செயலாளர் முத்தையா, பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், இந்த ஆண்டு பூஜை வழிபாடுகளை பக்தர்கள் அவர்கள் வீடுகளிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்னளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x