

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 பேர் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 7 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் என 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 9 பேரும் புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 46 பேர் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
புளியங்குடியில் கடந்த 2 நாட்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது தென்காசி மாவட்ட மக்களை கவலை அடையச் செய்துள்ளது.