

அரசு வழங்கும் ஆவணங்கள் இல்லாமல், அரசின் நிவாரண உதவிகளைப் பெற முடியாதவர்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. அந்த வகையில் ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை ஆகியவை இல்லாததால், அரசின் கரோனா நிவாரண உதவிகள் மட்டுமின்றி, தனியாரிடமிருந்து நிவாரணப் பொருட்களையும் பெற முடியாத பரிதாபச் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் பர்கூர் மலைக்கிராமப் பழங்குடி மக்கள். இவர்கள் உள்ளூர் விஏஓவின் பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையில், நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஈரோடு மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 28 சதவீதம் காடுகள்தான். இவற்றில் 120 பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவை ஒரு காலத்தில் வீரப்பன் காடுகளாக அறியப்பட்டவை. இதில் பர்கூர் மலைகளில் மட்டும் 33 குக்கிராமங்கள் உள்ளன.
மேற்கு மலையில் தாமரைக்கரை, தாளக்கரை, தொள்ளி, ஒண்ணகரை, தம்புரெட்டி, ஒசூர், கூலி நத்தம், கிழக்கு மலையில் ஒந்தனை, தேவர் மலை, வெப்பக்காம்பாளையம், மடம் பர்கூரைச் சுற்றி ஊசிமலை, சோளக்கணை, குட்டையூர், கத்திரி மலை உள்ளிட்ட கிராமங்களில் ஊராளி மற்றும் சோளகர் பழங்குடி இனங்களைச் சேர்ந்த சுமார் 3,000 குடும்பங்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றன.
இவற்றில் 90 சதவீத கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து கிடையாது. பல கிராமங்களிலிருந்து கர்நாடகப் பகுதிக்குள் நுழைந்துதான் தமிழகப் பகுதிக்குள் செல்ல முடியும். இப்படியான கிராமங்களில் கரோனா சூழலில் அன்றாடப் பிழைப்புக்கே மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சில நாட்கள் முன்பு இங்கு மக்கள் சந்திப்புக்கும், நிவாரண உதவிகள் வழங்கவும் சென்ற ‘சுடர்’ தன்னார்வ அமைப்பினரும், தமிழ்நாடு பழங்குடிகள் சங்கத்தினரும் இம்மக்களின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காரணம் இவர்களில் பல குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு இல்லாததால் ரேஷன் பொருட்களும், அரசின் நிவாரணத் தொகையான 1,000 ரூபாயும் வழங்கப்படவில்லை. பழங்குடியினர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஆட்களைத் தேடினால் பெரும்பான்மையோர் நல வாரிய உறுப்பினராகவும் இல்லை.
இதே நேரத்தில் சில தன்னார்வலர் அமைப்புகள் இம்மக்களுக்கு சுயமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டுவந்துள்ளனர். அதுவும் உள்ளூர் அரசு அலுவலர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு அவர்கள் முன்னிலையிலேயே வழங்கப்பட்டதால், அந்தப் பொருட்களும் மேற்படி ரேஷன் கார்டு, நலவாரிய உறுப்பினர் அட்டை இல்லாதவர்களுக்குப் போய்ச் சேரவில்லை.
இது றித்து ‘சுடர்’ அமைப்பின் நிறுவனர் நடராஜன் நம்மிடம் பேசுகையில், “விளாங்கோம்பை என்னும் கிராமத்துக்கு நாங்கள் போயிருந்தபோது ஒரு தனியார் அமைப்பின் நிவாரண உதவியை அரசு அலுவலர்கள் அங்குள்ள மக்களுக்கு வழங்கினார்கள். அங்கே 44 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால், ரேஷன் கார்டு உள்ள 33 பேருக்கு மட்டுமே பொருட்கள் கொடுத்தார்கள். ‘மற்ற குடும்பங்களுக்கும் கொடுங்க!’ன்னு கேட்டோம், ‘ரேஷன் கார்டு இல்லை’ங்கிறாங்க. ‘ரேஷன் கார்டு இல்லைன்னா இவங்க என்னத்தச் சாப்பிடுவாங்க?’ன்னு கேட்ட பின்னாடி, பொருட்கள் கொண்டு வந்த தன்னார்வலர்களிடம் ‘ரேஷன் கார்டு இல்லாம கொடுக்கலாமா?’ன்னு அலுவலர்கள் கேட்கிறாங்க. அவுங்க கொடுங்கன்னு சொன்ன பின்னாடிதான் கொடுக்கிறாங்க.
இதேபோலத்தான் இங்கே கொங்காடையைச் சுற்றியுள்ள 3 கிராமங்களில் 150 குடும்பங்களில் 50 பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. இதை நாங்க இருந்து கவனிச்சு சொன்னதுனால அவங்களுக்கும் பொருட்கள் கிடைச்சது. எல்லா ஊர்களிலும் இதுதான் நடக்குது. அதுக்கப்புறம்தான் இந்த மலைக்கிராமங்களில் எல்லாம் ரேஷன் கார்டு இல்லாதவங்களைக் கணக்கெடுக்க ஆரம்பிச்சிருக்கோம். இந்த பர்கூர் மலைக்கிராமங்களில் மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட பழங்குடிகளுக்கு ரேஷன் கார்டு இல்லைன்னு தெரியவந்திருக்கு.
இதேபோல அடுத்தது தாளவாடி- சத்தி வட்டத்தில் வரும் ஆசனூர், தலமலை, திங்களூர், கேர்மாளம், குன்றி, குத்தியாலத்தூர், கூத்தம்பாளையம், உள்ளிட்ட 13 ஊராட்சிகளில் உள்ள பழங்குடி கிராமங்களையும் கணக்கெடுத்து வருகிறோம். இந்த மக்களிடம் ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் கூட வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைக்கான பதிவேடு, ஆதார் அட்டை, குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ் இப்படி ஏதாவது ஒன்றின் அடிப்படையில் பொருட்கள் தரலாம். எதுவுமே இல்லை என்றாலும்கூட உள்ளூர் விஏஓவிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கி நிவாரணப் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்று சொன்னார்.
நல வாரியம் குறித்து, தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன் பேசும்போது, “சில வருடங்கள் முன்பே பழங்குடி நல வாரியத்தில் பதிவுசெய்யச் சொல்லி இம்மக்களிடம் கேட்டேன். அரசு அலுவலர்களிடமும் அதற்கான உரிய விண்ணப்பப் படிவத்தைத் தரச்சொல்லியும் கேட்டோம். சொற்பமான விண்ணப்பப் படிவங்களே கிடைத்தன. அதை ஒரு சிலர் மட்டுமே பூர்த்தி செய்து அளித்தார்கள். சிலரிடம் சாதிச் சான்றிதழ் இல்லை. விண்ணப்பப் படிவங்கள் தருவதிலும் அலுவலர்களிடம் சுணக்கம். அதன் காரணமாய் இப்போது இங்கு வசிக்கும் 3,000 பழங்குடிகளில் 300 பேர்கூட பழங்குடி நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லை. இப்போது, அதில் உறுப்பினராக இருந்தவர்களுக்கு மட்டும் நிவாரண உதவி கேட்டு எழுதிக் கொடுத்திருக்கிறோம். சீக்கிரமே நல வாரியத்தில் உறுப்பினராகும்படி பழங்குடி மக்களையும், அதற்கு விண்ணப்பப் படிவங்கள் கொடுத்து உதவும்படி அரசு அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ரத்தமும் சதையுமாகக் கண் முன்னே வாழும் மக்களுக்கு அரசு ஆவணங்களை மட்டுமே வைத்து நிவாரணம் அளிப்பது அறமாகாது. பரிதாபமான நிலையில் இருக்கும் இம்மக்களுக்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும் வரை, நிவாரணப் பொருட்கள் சென்று சேர்வதில் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசு மற்றும் சமூக அமைப்புகளின் கடமை.