கரோனா அச்சத்தால் சென்னையில் இருந்து குமரி திரும்பிய 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

கரோனா அச்சத்தால் சென்னையில் இருந்து குமரி திரும்பிய 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
Updated on
1 min read

சென்னையில் இருந்து கரோனா அச்சத்தால் சொந்த ஊரான குமரி திரும்பியுள்ள 300-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக காண்காணிக்கப்படுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மீதமுள்ள 6 பேரும் குணமடைந்து வருவதால் விரைவில் வீடு திரும்ப இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் பணி நிமித்தமாக குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை சென்ற சுகாதார பெண் ஊழியருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலும், அவர்து முகவரி குமரியில் இருப்பதால் குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார்.

இதனால் குமரியில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 பேராக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்ட சுகாதார பெண் ஊழியரின் 2 மாத குழந்தை, கணவர் உட்பட உறவினர்கள் 12 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். அப்போது அவர்களுக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் தற்போது கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதை தொடர்ந்து அங்கிருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சென்னையில் இருந்து கடந்த இரு நாட்களில் 300க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

சென்னையில் இருந்து அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் வந்த அவர்களை ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி, மற்றும் இறச்சகுளத்தில் உள்ள கல்லூரியில் பரிசோதனை, மற்றும் தனிமைப்படுத்தப்படும் மையத்திற்கு போலீஸார், மற்றும் சுகாதாரத்துறையினர் அழைத்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இதைப்போல் சிகப்பு மண்டலமாக கண்டறியப்பட்ட பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர்.

பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லாதவர்கள் இரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். மேலும் தொற்று உடையோருடன் தொடர்பில் இருப்பவர்கள் என கண்டறிப்பட்டவர்கள் இரு வாரங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலே வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகினறனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in