50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை

50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை
Updated on
1 min read

ஊரடங்கால் ஒரு மாதத்துக்கு மேலாக செயல்படாமல் இருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக அலுவலகம் இன்று (திங்கள்கிழமை) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க தொடங்கியுள்ளது.

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு மாதத்துக்கு மேலாக தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால் உயர் நீதிமன்ற நிர்வாக அலுவலகம் செயல்படவில்லை. அலுவலர்கள், ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக அலுவலகம் இன்று முதல் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செயல்படத் தொடங்கியது.

இதற்காக மாட்டுத்தாவணி உயர் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களின் சொந்தமாக வாகனம் இல்லாதவர்கள் நீதிமன்ற வாகனத்தில் பணிக்கு அழைத்து வரப்பட்டனர். 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது பணிக்கு வருபவர்களுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கி எஞ்சிய 50 சதவீத ஊழியர்கள் அடுத்த வாரம் பணிக்கு அழைக்கப்படுகின்றனர்.

ஊழியர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். தனி மனித விலகலை பின்பற்றி பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அலுவலர்கள், ஊழியர்கள் அலுவலகத்துக்குள் நுழையும் முன்பு காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in