

தூத்துக்குடி மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நகரின் பிரதான சாலைகள் மட்டுமல்லாது அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி திரவங்களை தெளிக்க நவீன இயந்திரம் பெறப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் பயன்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பம் கொண்ட பெல் நிறுவன தயாரிப்பான பெல்மிஸ்டர் என்ற கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இது, 15 கேவிஏ ஜெனரேட்டர் வசதியுடன் சேர்த்து மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ7.40 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன கருவியின் செயல்பாட்டை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நவீன கிருமி நாசினி தெளிப்பான் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 1500 லிட்டர் கொள்ளளவு கிருமி நாசினி திரவத்தை தெளிக்க முடியும்.
இந்த இயந்திர அமைப்பானது மாநகராட்சிக்கு சொந்தமான டாடா 909 மினி டிப்பர் லாரியில் பொருத்தப்பட்டுள்ளது.
அனைத்து சிறிய மற்றும் குறுகிய தெருக்களிலும் விரைந்து கிருமி நாசினி தெளிக்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.