ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேமித்த விளைபொருட்களுக்கு மேலும் ஒரு மாதம் வாடகை ரத்து: தென்காசி ஆட்சியர்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேமித்த விளைபொருட்களுக்கு மேலும் ஒரு மாதம் வாடகை ரத்து: தென்காசி ஆட்சியர்
Updated on
1 min read

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகளை மேலும் ஒரு மாதத்துக்கு (மே 31 வரை) வாடகை, வட்டியின்றி பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தென்காசி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விவசாயிகளின் நலன் கருதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை விளைபொருட்களை கிடங்குகளில் வாடகையின்றி சேமித்து வைத்துக்கொள்ளலாம் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

மேலும், விளைபொருட்களின்பேரில் அவற்றின் மொத்த மதிப்பில் 75 சதவீத பொருளீட்டுக்கடன் வட்டியின்றி பெறலாம் என அறிவித்தார்.

தற்போது, மேலும் ஒரு மாதத்துக்கு (மே 31 வரை) வாடகை, வட்டியின்றி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விற்பனைக்குழுவுக்கு வணிகர்கள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தில் இருந்தும் ஒரு மாத காலத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வசதியை தென்காசி மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 8778892076 (தென்காசி), 7010576162 (கடையநல்லூர்), 9442126355 (சங்கரன்கோவில்), 8778892076 (பாவூர்சத்திரம்) என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in